search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பலி"

    • இரும்பு கம்பியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு கொடி கம்பியில் பாய்ந்து தங்கமணியை மின்சாரம் தாக்கியது.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாய கூலி தொழிலாளி.

    இவரது மனைவி தங்கமணி (வயது 43), இவர்களுக்கு திருமண நாளான நேற்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்துள்ளனர்.

    இவர் துணிகளை துவைத்து காய போடுவதற்காக வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் கொடி கட்டியிருந்தனர். அதன் அருகே மற்றொரு சிறிய கம்பியை கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த கொடி கம்பியில் நேற்று தங்கமணி துணி காய போட்டுள்ளார்.

    பின்னர் அவர் துணிகளை எடுக்க சென்றபோது வீட்டில் உள்ள இரும்பு கம்பியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு கொடி கம்பியில் பாய்ந்து தங்கமணியை மின்சாரம் தாக்கியது.

    இதில் மூக்கில் ரத்தத்துடன் சுருண்டு விழுந்து தங்கமணி உயிருக்கு போராடினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கமணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் தங்கமணி உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி இறந்த தங்கமணிக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர் திருவோணம் அருகே திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாந்தி படுத்திருந்த அறைக்குள் பாம்பு புகுந்தது. உடனே பூனை, பாம்பை எதிர்த்து போராடியது.
    • பூனையை பார்த்து பாம்பு சீற வர, பூனை அதனை தடுக்க முயன்றது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சாந்தி (வயது 58). இவர்களது மகன் சந்தோஷ், பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    ரவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சாந்தி தனது மகனுடன் வசித்து வந்தார். மகன் வேலைக்கு சென்ற பிறகு சாந்தி வீட்டில் தனியாக இருப்பார். இதனால் நேரம் போக வேண்டும் என்பதற்காக வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்தார். பூனைக்கு உணவு வைப்பது, அதனுடன் கொஞ்சுவது என அவர் நேரத்தை செலவிட்டு வந்தார்.

    இந்தநிலையில் இரவில் சாந்தி ஒரு அறையிலும், அவரது மகன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டுக்குள் புகுந்தது. அந்த பாம்பை பார்த்ததும் அதனை வீட்டுக்குள் வர விடாமல் பூனை தடுத்தது. ஆனால் பாம்பு தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தது.

    சாந்தி படுத்திருந்த அறைக்குள் பாம்பு புகுந்தது. உடனே பூனை, பாம்பை எதிர்த்து போராடியது. பூனையை பார்த்து பாம்பு சீற வர, பூனை அதனை தடுக்க முயன்றது. இதனால் பூனைக்கும், பாம்புக்கும் மோதல் ஆனது. ஒருகட்டத்தில் பூனையின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    வீட்டில் படுத்திருந்த சாந்தியை பாம்பு கடித்தது. இதனால் சாந்தி சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அவரது மகன் ஓடி வந்து பார்த்தார். அப்போது சாந்தியை கடித்த பாம்பு அங்கிருந்து வெளியேறிச் சென்றது. உடனடியாக சாந்தியை மீட்ட அவரது மகன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார். இதுகுறித்து சாந்தியின் மகன் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே பூனை கடித்ததில் பாம்பும் பலியானது.

    • டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே தனது நண்பர்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட நாகினா தேவி மஞ்சிரம் என அடையாளம் காணப்பட்ட பெண், கட்டிடத்தில் இருந்து விழுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மணப்பாடா காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    முதற்கட்ட விசாரணையின்படி, நேற்று நாகினா தேவி தனது நண்பர்களுடன் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்தார்.

    அவரது நண்பர்களில் ஒருவர் அதே சம்பவத்தில் இருந்து நூலிழையில் உயர் தப்பினார். இவை, அங்கு பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    பரபரப்பான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சகோதரி-3 வயது மகள் படுகாயம்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் சிமி(வயது35). நேற்று சிமி மற்றும் அவரது 3 வயது மகள் சிவன்யா, சகோதரி சினி(35) ஆகிய 3பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். சினி ஸ்கூட்டரை ஓட்ட, சிமி தனது மகளுடன் பின்னால் அமர்ந்து பயணித்தார்.

    திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பால வட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் திடீரென சினியின் கட்டுப்பாட்டை மீறி ஓடி, பாலத்தில் மேலே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்தது.

    பல அடி உயரத்தில் இருந்து ஸ்கூட்டருடன் 3 பேர் கீழே விழுந்ததை அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிமி, அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிமி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமி உள்ளிட்ட 3 பேரும் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் சர்வீஸ் சாலையில் விழுந்தது ஏதே சினிமாவில் பார்த்தது போன்று இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிமி உள்ளிட்டோர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    • நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
    • தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தோனேசியாவில் 22 வயது இளம்பெண் ஒருவர் டிரெட்மில்லில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் 22 வயது இளம்பெண் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது, டிரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்த சமயத்தில் அப்பெண் நிலை தடுமாறி பின்னாடி உள்ள ஜன்னலை நோக்கி மெதுவாக நகர்கிறார்.

    ஜன்னலை திறந்த நிலையில் இருந்ததால் கீழே விழுவதற்கு முன்பு ஜன்னலை பிடிக்க முயன்றபோதிலும், நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த அப்பெண் தனது சகோதரர் மற்றும் காதலனுடன் ஜிம்மிற்குச் சென்றிருந்தார் என்றும் காதலன் இரண்டாவது மாடியில் அவருடன் உடற்பயிற்சி செய்ய சொன்னதாகவும் ஆனால், அந்த பெண் மேல் மாடியில் உள்ள டிரெட்மில்லைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி சென்ற நிலையில், பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இச்சம்பவம் கடந்த 18-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

    • பணியை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மொபட்டில் அமுதா வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
    • பொன்குறிச்சி நோக்கி வந்த ஈச்சர் லாரி திடீரென பெண் போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமுதா (47) இவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கவியரசன் (21), சோலைஅரசு (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    அமுதா திருச்செங்கோடு அருகே உள்ள எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    பணியை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மொபட்டில் அமுதா வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அவர் ராசிபுரம் அருகே உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில் ஒரு பேக்கரி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே பொன்குறிச்சி நோக்கி வந்த ஈச்சர் லாரி திடீரென பெண் போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பெண் போலீஸ் ஏட்டு அமுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராசிபுரம் போலீஸ் டி.எஸ்.பி. விஜயகுமார் உள்பட போலீசார் அமுதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அமுதாவின் உறவினர்கள் நூற்றுக்கணக்கான பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

    விபத்தில் பலியான அமுதா தடகளப் போட்டியில் பல பரிசுகளை வென்று குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட ஹூவாங், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார்.
    • வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது. இங்கு சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண், தனது கணவருடன் சுற்றுலா வந்திருந்தார்.

    பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட அவர், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார். 'புளூ பயர்' என்று அழைக்கப்படும் ஒரு எரிமலை சீற்ற நிகழ்வை படம் பிடிப்பதற்காக அவர் ஒரு குன்றின் உயரமான இடத்திற்கு சென்றார். அங்கிருந்து எரிமலை பின்னணியில் தன்னை மறந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். 75 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

    வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர். இதுபற்றிய செய்திகள் ஊடகங்களையும், வலைத்தளங்களையும் ஆக்கிரமித்தது. பலரும் விமர்சன கருத்துகளை பதிவு செய்தனர்.

    • சரத்குமாரின் 4 வயது மகன் அந்த ‘ஏர்கன்’ துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது
    • தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (வயது 30). இவரது அண்ணன் சரத்குமாரின் 4 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு இச்சி மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை சுற்றி திண்ணை போன்று அமைத்து இருந்தனர். அதில் 'ஏர்கன்' துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சரத்குமாரின் 4 வயது மகன் அந்த 'ஏர்கன்' துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென 'ஏர்கன்' துப்பாக்கியில் இருந்து குண்டு மின்னல் வேகத்தில் வெளியேறியது.

    அப்போது அந்த வழியாக வந்த தமிழரசின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் தமிழரசி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தமிழரசியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு தமிழரசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கட்டியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முருகனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும் (34), பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் (38) சேர்ந்து கோழி வளர்த்து வந்துள்ளனர். கோழி குஞ்சுகளை தூக்கி செல்ல கழுகு வருமாம். அந்த கழுகை விரட்டுவதற்காக 'ஏர்கன்' துப்பாக்கி வாங்கி வைத்துள்ளனர். அந்த துப்பாக்கியில் குண்டை போட்டு கழுகை சுடுவதற்காக தயாராக வைத்துள்ளனர்.

    இதனை சரத்குமாரின் 4 வயது மகன் எடுத்து விளையாடி உள்ளான். அப்போது சிறுவனின் கை பட்டு ஏர்கன்னில் இருந்து குண்டு வெளியேறி தமிழரசி மீது பாய்ந்து அவர் பலியானது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    தமிழரசி பலியானது தொடர்பாக அவருடைய அண்ணன் சரத்குமார், பெரியப்பா மகன் சதீஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

    • மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.

    அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி மைக்கேல் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.

    இந்த நிலையில் பூசாரி வைத்திருந்த மைக்கில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது பூசாரி மைக்கை தூக்கி வீசினார்.

    மைக் அருகில் இருந்த சீதம்மா என்பவரை மின்சாரம் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆட்டோ மூலம் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இறந்த பெண் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறிது நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் திருமண மண்டபத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.

    இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.

    இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.

    வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    • மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆத்துப்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மகள், குழந்தைகளை பார்த்து விட்டு இன்று வீடு திரும்பினார். லட்சுமியை மருமகன் தனசேகர், தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    இவர்கள் செல்லாண்டி அம்மன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்ற போது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனத்தின் சக்கரம் சரிந்து சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டி மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி லட்சுமி சாலையின் நடுவே விழுந்தார். அப்போது மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சித்திரங்கோடு மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 45). இவர் இட்லி மாவு தயார் செய்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி அனிதா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் குலசேகரத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வெண்டலிகோடு பகுதியில் சென்ற போது கனிம வளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரி வந்தது. இந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கணவன்-மனைவி இருவரும் சாலையில் விழுந்தனர். அனிதா கீழே விழுந்த நிலையில், டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அனிதாவின் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் இது போல் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் கனரக லாரிகளை தடை செய்ய வேண்டும், அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ஜெயராஜ், பேரூராட்சி தலைவர்கள் அகஸ்டின் (பொன்மனை), சுகிர் ஜெபராஜ் (வேர்கிளம்பி), ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), பொன் ரவி (திற்பரப்பு) , ஊராட்சி தலைவர்கள் பி.டி.செல்ல ப்பன், விமலா சுரேஷ், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் தாசில்தார் புரந்ந்தரதாஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சப்-கலெக்டர் லொரைட்டா, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்கவுதம் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சு வார்த்தையில் கனிமப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் தடை செய்யப்படும் என்றும் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரி மூடப்படும், அனிதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து அனிதாவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாரி டிரைவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியை மூட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த கல்குவாரியை மூடி சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கனிமவளத் துறை அதிகாரிகள் கல்குவாரிக்கு சென்று கல்குவாரியை மூடி சீல் வைத்தனர்.

    ×